முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 16, 2010

தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்: சாதிக்குமா இந்தியா?

செஞ்சுரியன், டிச.15: இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியும்,இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியும் மோதும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மழையின் குறுக்கீடு இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கடந்த சில நாள்களாக மழை இல்லை என்றாலும் வியாழக்கிழமை மழைபெய்யக்கூடும் என்று தெரிகிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சை பால் ஹாரிஸ் மட்டுமே கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளத்தில் உள்ள புற்கள் பௌலர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் வான்ஸில் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இதுவரை 4 முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தான் விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற குறை நீண்ட நாளாக இருந்து வருகிறது.
சமீப காலமாக இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சேவாக், கம்பீர், லட்சுமணன் ஆகிய 5 முன்னணி வீரர்கள் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதேபோல் இளம் வீரர்களும் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதனால் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களை அவர்கள் ஓரளவு அறிந்து வைத்திருப்பவர்களே.
மேலும் இந்திய வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தென்னாப்பிரிக்க சென்றனர். இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டனின் கேப்டவுன் பயிற்சி மையத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அது இந்திய வீரர்களுக்கு கை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.  
இந்திய அணியைப் பொறுத்தவரையில் சேவாக், கம்பீர், டெண்டுல்கர், திராவிட், லட்சுமணன், தோனி, ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசிய ஹர்பஜன் சிங்கும் தென்னாப்பிரிக்க தொடரில் பின்வரிசை பேட்டிங்கில் பலம் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பௌலிங்கில் ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோரை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது.
ஜாகீர்கான் விளையாடுவாரா?
ஜாகிர்கான் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் இன்னும் குணமடையாததால் முதல் டெஸ்டில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் இடம்பெறாத பட்சத்தில் உமேஷ் யாதவ் அல்லது ஜெயதேவ் உனட்கட் களமிறக்கப்படுவார்கள் என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஸ்மித், ஆம்லா, ஜேக்கஸ் காலிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆம்லா, டிவில்லியர்ஸ் ஆகியோர் சமீபத்திய போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பௌலிங்கில் டேல், மோர்னே மோர்கல், மெக்லேரன், சோட்சோபி ஆகியோர் பவுன்சர்களை வீசி இந்திய அணிக்கு நெருக்கடியை அளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய அணி:
மகேந்திரசிங் தோனி (கேப்டன்), கௌதம் கம்பீர், வீரேந்திர சேவாக், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த், முரளி விஜய், சேதேஸ்வர் புஜாரா, ரித்திமான் சாஹா, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், பிரக்யான் ஓஜா.
தென்னாப்பிரிக்க அணி:
கிரீம் ஸ்மித் (கேப்டன்), அல்விரோ பீட்டர்சன், ஹசிம் ஆம்லா, ஜேக்ஸ் காலிஸ், ஏபி டிவில்லியர்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், மார்க் பவுச்சர், ரியான் மெக்லேரன், டேல் ஸ்டெயின், பால் ஹாரிஸ், மோர்னே மோர்கல், லான்வாபோ சோட்சோபி.

போட்டி நேரம்: பிற்பகல் 2 மணி.
ஒளிபரப்பு: நியோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி

No comments:

Visitors