சென்னை, டிச.15: நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்துப்பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பெட்ரோல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வை வெகுவாக பாதிக்கும்.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, கடந்த 6 மாத காலத்தில் 6 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் பெட்ரோல் விலை ரூ.12 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய இந்த விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு கட்சி அணிகளையும், கண்டனக்குரல் எழுப்புமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment