வங்க கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று மழை இல்லை. இரவில் மட்டும் சில பகுதிகளில் மழை பெய்தது. மழை விட்ட பிறகும் சென்னையின் புறநகரில் தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடிய வில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள்.
அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் சரியான கழிவுநீர் வசதி இல்லாததால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது. அங்குள்ள ராஜமாணிக்கம் தெரு, விட்டல்தெருவில் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல அங்குள்ள நாராயண நகரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அயனம்பாக்கம் பகுதியில் உள்ள மேல் அயனம்பாக்கம், ஜனசக்திபுரம், மாசிலாமணி நகர், தினேஷ்நகர் ஆகிய இடங்களில் 4 அடி தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்குள்ள மக்கள் டெர்மாகோலை படகாக பயன்படுத்தி வீடு களுக்கு செல்கின்றனர்.
தாம்பரம் பகுதியில் மழை வெள்ளம் காரணாக 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பெருங்களத்தூரில் உள்ள பெரியார் சமத்துவபுரம், அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
எண்ணூர் உலகநாதபுரத் தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அங்கு தண்ணீர் வடிய வில்லை. அங்கு முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதேபோல மடிப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடிய வில்லை.
இதேபோல சென்னையில் வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் திருப்பதி நகர் விரிவாக்கம் உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகளும், நர்சுகளும் அவதிக்குள்ளானார்கள். இதன் காரணமாக அங்குள்ள ஹாஸ்டல் மூடப்பட்டது.
வில்லிவாக்கம் பஸ்நிலையம் முழுவதும் சாக்கடையாக மாறி உள்ளது. பஸ்நிலையத்தின் கிழக்கு பக்கத்தில் ஒருஅடி உயரத்திற்கு சேறும் சகதியும் உள்ளது. அதில் தான் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
பயணிகள் அந்த சகதியில் மிதித்தபடி சென்றுதான் பஸ் ஏற வேண்டிய அவலநிலை உள்ளது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் பலதடவை துர்நாற்றம் மிகுந்த சாக்கடையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது.
பயணிகள் அனைவரும் பஸ்நிலைய சாக்கடையை மிதித்துவிட்டு ஏறுவதால் பஸ்சில் சாக்கடை நாற்றம் வீசுகிறது.
மழைக்கு முன்பே பல ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது. தற்போது பலத்த மழையால் ரோடுகள் மேலும் அரிக்கப்பட்டு பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளானார்கள். பல ரோடுகளில் இன்னும் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகிறார்கள்.
உஸ்மான் சாலையின் ஒருபகுதி, மெக்கினிக்கல் சாலை, பி.டி.ராஜன் சாலை, கிரீம்ரோடு, பின்னி ரோடு, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, மீனம்மாள் சாலை, பேப்பர்மில்ஸ் சாலை, வில்லிவாக்கம் - ரெட்கில்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, உள்பட பல சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வளசரவாக்கத்தில் இருந்து போரூர் செல்லும் சாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை ஏராளமான குண்டும் குழியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வண் டியை ஓட்ட முடியாமல் தத் தளிக்கிறார்கள். பஸ் போன்ற பெரிய வாகனம் செல்ல முடிகிறது. கார், மோட்டார் சைக்கிள்கள் செல்வதில் சிரமம் காணப்படுகிறது.
கடப்பா ரோட்டின் பகுதியான மாதவரம்- அம்பத்தூர் சாலை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. கொரட்டூர் ஏரி திறந்து விடப்பட்டதால் அந்த ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குண்டும் குழியுமான சாலைகளால் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அலுவலகம் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய முடியவில்லை. பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். சாலைகளை உடனடியாக சீரமைப்பது அவசியமான தாகும்.
News Uptate : மாலைமலர்

No comments:
Post a Comment