முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 28, 2012

"எளியவர்; பழகுதற்கு இனியவர்" - முஹம்மது ஃபரூக் மரைக்காயர் மறைவு பற்றி கருணாநிதி

சென்னை, ஜன. 27: கேரள மாநில ஆளுநர் எம்.ஓ. ஹசன் ஃபரூக் மரைக்காயர் மறைவுக்கு தமிழக முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி, திமுக தலைவர் கருணாநிதி உள்பட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர்கள் தனித்தனியே வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஃபாத்திமா பீவி: "அரசியல் மாண்புமிக்க ஃபரூக் மரைக்காயர் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவருடைய மறைவு நாட்டுக்கும், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்துக்கும் பேரிழப்பாகும். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை புதுச்சேரி முதல்வராகவும் அவர் பொறுப்பு வகித்த காலங்களில் மிகவும் அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டவர். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'
கருணாநிதி: "ஃபரூக் மரைக்காயர் பழகுவதற்கு இனிமையானவர். திமுகவில் பணியாற்றிய காலத்திலும், மத்திய அமைச்சராக அவர் பணியாற்றிய காலத்திலும் அடிக்கடி என்னைச் சந்திக்கக் கூடியவர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டபோதும் கூட, என்னை இல்லத்தில் வந்து சந்தித்து பேசிவிட்டுத்தான் சென்றார். என்னிடம் தனிப்பட்ட அன்புகொண்டு பாசத்தோடு பழகிவந்த அவரை இயற்கை இவ்வளவு விரைவில் பறித்துக்கொண்டு போய்விடும் என்று எண்ணவில்லை.'
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்: "முதல்வராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதராகவும், கேரள மாநில ஆளுநராகவும் சீரிய முறையில் பணியாற்றியவர் ஃபரூக் மரைக்காயர்.
காங்கிரஸ் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவர். நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும்பொழுது, மைய மண்டபத்துக்கு வந்து அனைவரிடம் கலகலப்பாக பேசக்கூடியவர். அவருடைய மறைவு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.'
பாமக நிறுவனர் ராமதாஸ்: "ஃபரூக் மரைக்காயர் என் இனிய நண்பர். மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல்வேறு சூழல்களில் என்னைச் சந்தித்து அரசியல் மற்றும் சமுதாய நிலைமை குறித்து கலந்தாய்வு நடத்தியிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: "கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர் ஃபரூக் மரைக்காயர். தலைசிறந்த மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார். நான் சந்திக்கும் போதெல்லாம் ஈழத்தமிழர்களின் நலனைப் பற்றியே மிகுந்த கவலையோடு உரையாற்றுவார். ஆரோக்கியமான அரசியலுக்கும், நாகரிகத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த உன்னதமான மனிதநேய உத்தமவர் ஃபரூக்' என்று அவர் கூறியுள்ளார்.

அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
புதுச்சேரி, ஜன. 27: புதுச்சேரியில் 21 குண்டுகள் முழங்க, கேரள ஆளுநர் எம்.ஓ.எச்.ஃபரூக் மரைக்காயரின் உடல் அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வியாழக்கிழமை இரவே புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வெள்ளிக்கிழமை ஃபரூக்கின் வீட்டுக்குச் சென்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில் முதல்வர் என்.ரங்கசாமி ஃபரூக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் டி.தியாகராஜன், என்.ஜி.பன்னீர்செல்வம், பெ.ராஜவேலு, பேரவைத் தலைவர் வி.சபாபதி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, பிரதமர் அலுவலக இணையமைச்சர் வி.நாராயணசாமி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் ப.கண்ணன் ஆகியோர் உடன் சென்று, மறைந்த ஃபரூக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Visitors