சென்னை : பொன்னேரி அடுத்த பழவேற்காடு அரங்ககுப்பம் மீனவர்கள் செல்வம், ராஜேந்திரன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடலில் வீசிய வலையை இழுக்க முடியவில்லை. வலையில் அதிக எடை உள்ள பெரிய மீன் மாட்டியிருப்பதாகக் கருதி வலையை கஷ்டப்பட்டு பிடித்து இழுத்தனர். படகில் வைத்து பிரித்துப் பார்த்தபோது, அதில் 6 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட கிண்ணம் போன்ற ஒரு பொருள் கிடைத்தது. இதன் எடை 200 கிலோ உள்ளதாக கூறப்படுகிறது.
வலையில் சிக்கிய பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதை அறிந்ததும் குப்பத்தை சேர்ந்தவர்கள், கடற்கரை பகுதியில் திரண்டனர். பொன்னேரி தாசில்தார் வேலம்மாளுக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குப்பம் நிர்வாகிகள் ஜெயபால், ஜெகன் ஆகியோர் அதை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தாசில்தார் வேலம்மாள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் நிலை தவறியதால் வெடிக்க வைக்கப்பட்டது. அதன் உதிரிபாகம் கடலில் விழுந்திருக்கலாம்.
கடந்த மாதம் 28ம்தேதி காட்டுப்பள்ளி கோரகுப்பத்தில் உள்ள கடற்கரையிலும், பழவேற்காடு இஸ்ரேல் குப்பத்திலும் பந்து போன்ற பொருளை மீனவர்கள் கண்டுபிடித்தனர். தற்போது கிண்ணம் போன்ற பொருள் கிடைத்துள்ளது. இது பொன்னேரி ஆர்டிஓ ஆபீசில் வைக்கப்படும். ஸ்ரீஹரிகோட்டா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் வந்து ஆய்வு செய்வார்கள்’’ என்றார்.
nanri :- Dhinakaran News

No comments:
Post a Comment