தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில், கையால் தயாரிக்கப்படும் ஆவணங்கள் காலாவதியாகின்றன. புத்தாண்டு முதல், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புதிய, "கேரஸ்' சாப்ட்வேர் மூலம் அனைத்து பதிவுகளும் துவங்கியுள்ளன.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு விஷயங்கள் தற்போது நமது கைக்குள் அடங்கியுள்ளது. இதில், போலீஸ் மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது தமிழக போலீசிற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, நவீன ஆயுதங்கள், அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதுடன், குற்ற ஆவணங்களை ஒருங்கிணைப்பதற்கான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தற்போது, தமிழகம் முழுவதும் நடக்கும் குற்ற சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் விபத்துகள் போன்றவை அடங்கிய முழு தகவல்களை உள்ளடக்கிய நெட்ஒர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. "கிரைம்ஸ் அண்டு கிரிமினல் டிராக்கிங் நெட் ஒர்க் அண்டு சிஸ்டம்ஸ் - சி.சி.டி.என்.எஸ்.,' என்ற பெயரில் இந்த நெட்ஒர்க் அறியப்படுகிறது. தேசிய இ-கவர்னன்ஸ் திட்டத்தின் கீழ், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில், தேசிய அளவிலான நெட்ஒர்க் கட்டமைப்பு அமைக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், அனைத்து போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்கு விவரங்கள், மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. போலீஸ் நிலையங்களில் "எழுத்தர்' பணியில் இருப்பவர்கள் ஒவ்வொரு புகார்கள், எப்.ஐ.ஆர்., விவரங்கள், குற்றப்பத்திரிகை, அன்றாட நிகழ்வுகள் உள்ளிட்ட 26 வகையான ஆவணங்களையும் கையால் எழுதித்தான் தயாரிக்க வேண்டிய நிலை தொடர்ந்து வந்தது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்தாலும், முதலில் இவற்றை தயாரித்து, குறிப்பிட்ட சில விவரங்களை மட்டும் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டரில் பதிவு செய்தாலும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உள்ள தகவல்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது வந்துள்ள புதிய சாப்ட்வேரால் போலீசாரின் அனைத்து பிரச்னைகளுக்கும் வடிகால் கிடைத்துள்ளது. "கிரைம் அனலைசிஸ் அண்டு ஆட்டோமெட்டிக் ரிகார்ட்ஸ் அப்டேட்டிங் சிஸ்டம் - கேரஸ்' என்ற பெயரில் வந்துள்ள புதிய மென்பொருள் போலீசாரின் பணிகளை தகவல்கள் மிகுந்ததாகவும், மிகவும் இலகுவானதாகவும் மாற்றியுள்ளது.
இதற்கு முன்பு இருந்த, "சிபா' என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் இருந்த அனைத்து குறைகளும் களையப்பட்டு, புதிய கேரஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு மத்தியில் போலீசில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாப்ட்வேர் குறித்த பயிற்சிகள், அப்போதிருந்தே போலீசாருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கேரஸ் சாப்ட்வேர் மூலம், போலீஸ் நிலையங்களில் எழுத்தரால், கையில் எழுதி தயாரிக்கப்பட்டு வந்த 26 வகையான ஆவணங்களும், இலகுவான, "டேட்டா என்ட்ரி' மூலம் தயாரித்து விடலாம். இதன் மூலம், போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்களை பெற்றுக் கொண்டு தரப்படும், சி.எஸ்.ஆர்., போலீஸ் தொடர்பான ஆவணங்கள், புகார்கள் மீதான எப்.ஐ.ஆர்., தொடர்பான விவரங்கள் அனைத்தும் இந்த சாப்ட்வேர் மூலம் விரைவாக பெற முடியும். வழக்கு பதிவு செய்யும் போது குற்றச்சம்பவத்தை பதிவு செய்தால், அதற்குரிய தண்டனை சட்டப் பிரிவுகளை பெறும் வகையிலும் இந்த சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாப்ட்வேர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில், "இன்ஸ்டால்' செய்யப்பட்டு விட்டது. அப்போதிருந்தே, ஸ்டேஷன்களில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், முதல் ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் "இன்ஸ்டாலேசன்' முதல் பராமரிப்பு வரையில் அனைத்து பணிகளையும் அதற்கென ஒவ்வொரு பகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள, டெக்னிக்கல் எஸ்.ஐ., செய்து வருகிறார். இந்தாண்டு (2011) துவக்கம் முதல் போலீஸ் நிலையங்களில் அனைத்து பதிவுகளும் இந்த சாப்ட்வேர் மூலம் தான் நடந்து வருகிறது.
1,700 பேருக்கு பயிற்சி: சென்னையில் நடந்து வரும், "கேரஸ்' பயிற்சி குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சாப்ட்வேர் வந்ததால், எழுத்துப் பணிகள் முழுமையாக குறைந்து விடும். இந்தாண்டு முதல், போலீசில் அனைத்து ஆவணங்களும் இந்த சாப்ட்வேர் மூலம் தயாரிக்கப்படும் வகையில், பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் தற்போது வரை 24 பிரிவுகளாக 1,700 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து பயிற்சிகள் நான்கு மையங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை தவிர மற்ற பகுதிகளிலும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதிகாரி கூறினார்.

No comments:
Post a Comment