அகமதாபாத் : இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலில் சாதனை படைத்த நம்பர் 1 படம் என்று இமாலய பெருமை பெற்ற, ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம், ஐ.ஐ.எம். மாணவர்களுக்கு எம்.பி.ஏ. பாடமாகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், பல கோடி பொருட்செலவில் தயாரித்த படம் எந்திரன். இதில், ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்தனர். ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தியிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
படப்பிடிப்பு துவங்கிய முதலே, பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளிலும் இதுவரை ஒரு இந்திய படம் சாதிக்காத அளவுக்கு பெரும் வசூல் சாதனையை எட்டியது.
அமெரிக்காவில் முதல் வாரத்திலேயே எல்லா டிக்கட்களும் விற்றுத்தீர்ந்தன. இந்தியாவில் வெளிவந்த எந்த ஒரு படமும் இதுவரை இவ்வளவு வசூல் சாதனையை படைத்ததில்லை என்ற அளவுக்கு வசூலில் நம்பர் 1 இமாலய சாதனையை பெற்றது ‘எந்திரன்’ படம். நூறு நாட்களை நெருங்கிய நிலையில், இன்னமும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘எந்திரன்’ படம், இப்போது இன்னொரு பெருமையை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மேலாண்மை கல்வியில் சிறந்த , இந்திய மேலாண்மை (ஐ.ஐ.எம்.) கல்வி நிறுவனம், ‘எந்திரன்’ பட சாதனையை தன் மாணவர்களுக்கு சிறப்பு பாடமாக வைக்க முடிவு செய்துள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. முதுநிலை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு பாடம் இடம்பெறும். வர்த்தக மேலாண்மை துறையில் கைதேர்ந்த இளைஞர்களை உருவாக்குவதில் சிறந்த இந்த கல்வி நிறுவனம், ‘எந்திரன்’ படத்தை சிறப்பு பாடமாக தேர்வு செய்த காரணம், அதன் வசூல் சாதனைதான்.
இந்திய சினிமா வர்த்தக துறையில் லாபத்தை ஈட்டித்தரும் வர்த்தக நுணுக்கங்கள் பற்றி ஆராயும் எம்.பி.ஏ. மாணவர்களின் ஆராய்ச்சிப்படிப்பில் ‘எந்திரன்’ சாதனை வரலாறு ஒரு பாடமாக வைக்கப்படுகிறது. ரஜினியின் நடிப்பு, ஜோக் மற்றும் ரோபாட் போன்ற விஷயங்களும் பாடத்தில் சேர்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் ஒரு படம் நம்பர் 1 வசூல் சாதனையை படைத்தது ஒரு பக்கம் உலக சாதனையாக கருதப்படுகிறது என்றால், அந்த வசூல் சாதனை வரலாறு, மேலாண்மை மாணவர்களுக்கு சிறப்பு பாடமாக வைக்கப்படுவதும் இதுவரை எந்த படத்துக்கும் கிடைக்காத பெருமையாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment