முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 31, 2010

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஒரே நாளில் நடக்குமா?

சென்னை : தமிழக சட்டப்பேரவை  தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்று பல  கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இதை பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்தார். அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற பெரும்பாலான கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. பிற்பகலில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், மாலையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேரளாவில் தேர்தல் குறித்து நேற்று (நேற்று முன்தினம்) ஆய்வு செய்தோம். தமிழகத்தில் இன்று (நேற்று) சட்டசபை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவது மற்றும் சில அதிகாரிகள் மீது நம்பிக்கை குறைவாக உள்ளது என்று அரசியல் கட்சியினர் கூறினர். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகளை பணியிட மாறுதல் தான் எங்களால் செய்ய முடியும். வேறு எந்தவித நடவடிக்கையையும் எங்களால் எடுக்க முடியாது. எல்லா கட்சிகளும் தேர்தலில் பண பலம் குறித்தும், இலவச மது, வேட்டி&சேலைகளை வழங்கி வாக்காளர்களை கவர்வது குறித்தும் பிரச்சினை எழுப்பினர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.  மதுரையில் அர சியல் கட்சிக்காக முறைகேடாக புகைப்பட அடையாள அட்டை செய்து கொடுத்த 2 வாக்குசாவடி அதிகாரிகள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போலீஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 25ம் தேதி வாக்காளர் படத்துடன் கூடிய அடையாள அட்டை வினியோகிக்கப்படும். தமிழ்நாட்டில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை புகைப்பட வாக்காளர் அட்டை தொலைந்து போவது கவலைக்குரியது. தொலைந்து போன கார்டுகளுக்கு பிப்ரவரி 15ம் தேதி புதிய கார்டுகள் வழங்கப்படும். தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது பல இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினோம். 5 ஆயிரம் சப்&இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றினை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.

1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. அந்த ஜனவரி 25ம் தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்படும். அன்றைய தினம் 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி திருப்திகரமாக உள்ளது. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பணி 99.77 சதவீதம் முடிவடைந்துள்ளது. புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 99.68 சதவீதம் முடிவடைந்துள்ளது.

தேர்தலின் போது பணபலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பீகாரில் பண
பலத்தை தடுக்க வேட்பாளர்கள் செலவுகள் புதிய விதிமுறைப்படி கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, வேட்பாளர்களுக்கு
புதிய வங்கி கணக்குகள்  ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலம் செலவழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், தேர்தல் பார்வையாளர்கள், நுண்பார்வையாளர்கள், வீடியோ மூலம் தேர்தல் செலவு கண்காணிக்கப்பட்டது. பொதுக்கூட்டங்களும் கண்காணிக்கப்பட்டன. அந்த முறை தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்படும்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக லத்திகா சரண் இருந்த போது(தற்போது டிஜிபி), மாநகராட்சி தேர்தலில் பாரபட்சமாக செயல்பட்டதாகவும், அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் சில கட்சியினர் கூறியுள்ளனர். இதை கவனத்தில் எடுத்துள்ளோம். இந்த கோரிக்கை ஆய்வு செய்யப்படும்.

தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் கூறியுள்ளனர். தமிழக தேர்தலுடன் கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரி போன்றவற்றிற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த பகுதியிலும் ஆய்வு மேற்கொண்ட பின்னரே, ஒரே நாளில்  தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு குரேஷி கூறினார். பேட்டியின் போது துணை தேர்தல் கமிஷனர் டாக்டர் அலோக் சுக்லா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments:

Visitors