முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 26, 2010

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் 2வது முறையாக தோல்வி : ஏவப்பட்ட சில வினாடிகளில் வெடித்து சிதறியது


சென்னை : நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நேற்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால், ஜிசாட் - 5பி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முயற்சி, ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தோல்வியில் முடிந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), 1972ம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக, அவ்வப்போது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில், 2,310 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோளான, "ஜிசாட்-5 பி'யை ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது.கடந்த 20ம் தேதியே விண்ணில் செலுத்தப்பட இருந்த இந்த செயற்கைக்கோள், ராக்கெட்டின் கிரியோஜெனிக் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அந்த கோளாறு சரி செய்யப்பட்டு, ராக்கெட்டை நேற்று மாலை 4:06 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வரிசையில் ஏழாவது ராக்கெட்டான, ஜி.எஸ்.எல்.வி., - எப்06 மூன்று பகுதிகளை கொண்டது. முதல் பகுதி முன்னோக்கி செலுத்தும் 138 டன் திட எரிபொருளையும், 42 டன் ஹைபர்கோலிக் திரவ எரிபொருளையும் கொண்டிருந்தது.

இரண்டாம் பகுதி 39.4 ஹைபர்கோலிக் எரிபொருளையும், மூன்றாவது பகுதி 15.2 டன் எடை உடைய திரவ ஆக்சிஜன், திரவ ஹைட்ரஜன் கொண்ட கிரையோஜெனிக் பகுதியையும் கொண்டிருந்தன. நேற்று மாலை 4:06 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால், சில வினாடிகளிலேயே நடுவானில் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெடித்துச் சிதறி, தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. அதனுடன் ஏவப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோளும் தீக்கிரையானது. இதற்கு முன், 2006ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - எப்02 ராக்கெட்டும், கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., - டி3 ராக்கெட்டும் தோல்வியில் முடிந்தன. தற்போது மூன்றாவது முறையாக ஜி.எஸ்.எல்.வி., - எப்06 ராக்கெட்டை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இதுவரை ஏவப்பட்ட ஏழு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில், நான்கு ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன; மூன்று ராக்கெட்கள் தோல்வியில் முடிந்துள்ளன. பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை ஏவும் முயற்சி மூன்றாவது முறையாக தோல்வியடைந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளை கவலையடையச் செய்துள்ளது.ராக்கெட் முதல் பகுதி பிரிந்து, இரண்டாம் பகுதி இயங்க துவங்குவதற்கு முன்பே நடந்து முடிந்த இந்த துயர சம்பவத்தால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த இந்த தோல்வி குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

125 கோடி ரூபாய் செலவு! : ஜிசாட் - 5பி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இத்திட்டத்தில், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை உருவாக்க இஸ்ரோ 125 கோடி ரூபாய் செலவிட்டிருந்தது. ஜிசாட் - 5 பி செயற்கைக்கோள், 1999ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் - 2இ செயற்கைக்கோள் செய்து வந்த தகவல் தொடர்பு மற்றும் வானிலை ஆய்வுப் பணிகளை தொடர இருந்தது. ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியதையடுத்து, இஸ்ரோ செலவழித்த 125 கோடி ரூபாயும் வீணானது.விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டே பயன்படுத்தப்பட இருப்பதால், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜினை பயன்படுத்தி அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டும் தோல்வியில் முடிந்தது.இதனால், நேற்று ஏவப்பட்ட ராக்கெட்டில் ரஷ்யாவின் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டது. மேலும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை (2,310 கிலோ) இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவும் முயற்சியையும் இம்முறை இஸ்ரோ மேற்கொண்டிருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.

ராக்கெட் தோல்விக்கு காரணம் என்ன? இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் பேட்டி : ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் தோல்வி அடைந்தததற்கான காரணம் என்ன என்பது குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் பாய்ந்து சென்ற 43 வினாடிகளுக்கு பின், அதன் பாதை மாறியது. அதை கட்டுப்பாட்டில் கொண்டு வர விஞ்ஞானிகள் முயன்றனர். அது இயலாததால் 47 வினாடிகளுக்கு பிறகு, அது செயலிழக்கச் செய்யப்பட்டு, 50வது வினாடியில் கடலில் சிதறி விழச் செய்யப்பட்டது. எட்டு கி.மீ., பயணம் செய்த ராக்கெட், இரண்டரை கி.மீ., தூரத்தில் கடலில் விழுந்தது. ராக்கெட் தோல்விக்கான காரணம் குறித்து, அடுத்த சில தினங்களில், நிபுணர்களும், விஞ்ஞானிகள் குழுவினரும் ஆராய்வர். கிரையோஜெனிக் இன்ஜின் பகுதியில், தெர்மோஸ்டார்ட் வால்வில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, கடந்த 20ம் தேதி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின், பாதிப்பை சரிசெய்து, எல்லாம் நன்றாக உள்ளது என முடிவு செய்து, விண்ணில் செலுத்தப்பட்டது.

இருந்தும், தோல்வி அடைந்து விட்டது.ராக்கெட் தோல்வியின் மூலம் 325 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டின் முதல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செயலிழந்துள்ளதை அறிய முடிகிறது. பிரச்னைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரிசெய்த பின், வரும் ஆண்டு ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.வரும் பிப்ரவரி முதல் வாரம் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூன்று செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்படும். சந்திரயான் -2 திட்டம் ரஷ்ய உதவியுடன் 2013 -14 ஆண்டு செயல்படுத்தப்படும்.ரஷ்யா அளித்த கிரையோஜெனிக் இன்ஜின்களில் இன்னும் ஒன்று மீதமுள்ளது. தேவைப்படின் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:

Visitors