முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 25, 2010

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவைக்கு கூடுதல் ஏற்பாடு: தலைமை அதிகாரி பேட்டி

சென்னை, டிச. 24: பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக சென்னையிலேயே கால் சென்டர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்று பி.எஸ்.என்.எல். சென்னை தொலைத்தொடர்பு வட்டத்தின் தலைமைப் பொது மேலாளர் ஏ. சுப்பிரமணியன் (படம்) கூறினார்.

தேசிய நுகர்வோர் தினத்தை ஒட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

சென்னை உள்பட, தமிழகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கான கால்சென்டர் தற்போது பெங்களூரில் இருக்கிறது. இதனால் தமிழக வாடிக்கையாளர்களுக்கு சில சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன.

எனவே வாடிக்கையாளர்களின் வசதிக்காக சென்னையிலேயே கால் சென்டர் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் தமிழக தொலைத்தொடர்பு வட்டங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கால்சென்டர் மூலம் சேவை அளிக்கப்படும்.

பொங்கல் பண்டிகையின் போது இந்த மையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போன்களில் எஸ்.எம்.எஸ். அனுப்ப அனுமதி பெற்றுள்ள நிறுவனங்கள் ஏமாற்றும் நோக்கிலான விஷயங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவதாகத் தகவல் வந்தால் அதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைக்காக இப்போது 1640 உயர் கோபுரங்கள் உள்ளன. மேலும் 327 உயர் கோபுரங்கள் அமைக்கும் பணி ஓரிரு மாதங்களில் நிறைவடையும். நகரில் பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைப்பதில் உள்ள பிரச்னை அதன்பிறகு வெகுவாகக் குறைந்துவிடும்.

சென்னையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு உள்ள கட்டமைப்பு வசதிகளின் மூலம் 25 லட்சம் முதல் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் வரை தர முடியும். ஆனால் இப்போது 14 லட்சம் இணைப்புகள்தான் உள்ளன. எனவே அதிகளவில் செல்போன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அதிவேக இன்டர்நெட் (பிராட்பேண்ட்) இணைப்பு பெற விரும்புவோர் 94445 99999 என்ற செல்போன் எண்ணுக்கு பி.எஸ்.என்.எல். என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால், வாடிக்கையாளரை அணுகி இணைப்பு தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையில் அதிக முக்கியமான, தொலைபேசி இணைப்பு நெரிசல் அதிகமாக உள்ள இணைப்பகப் பகுதிகளைக் கண்டறிந்து, ஒவ்வொரு அதிகாரியும் ஒவ்வொரு பகுதியை தத்தெடுத்துக் கொண்டு அதை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கிறோம்.

வாடிக்கையாளர்கள் சேவையை நோக்கமாகக் கொண்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் வசதி 10 வாடிக்கையாளர் சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர மேலும் 15 வாடிக்கையாளர் சேவை மையங்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே அலுவலகம் செல்லும் வாடிக்கையாளர்கள், அலுவல் நேரம் முடிந்த பிறகுகூட பி.எஸ்.என்.எல். மையங்களின் சேவையைப் பெற முடியும்.

3 ஜி அலைக்கற்றை சேவையில் செல்போன் இணைப்பு தரத் தொடங்கிய பிறகு பி.எஸ்.என்.எல். மூலம் 95 ஆயிரம் பேர் இதில் சேர்ந்துள்ளனர்.

சாதாரண தொலைபேசி இணைப்பில், அழைப்பவர் எண்ணைக் காட்டும் வசதியுள்ள தொலைபேசிக் கருவிகளில் குறைகள் இருப்பதாகப் புகார்கள் வருகின்றன. இதுபற்றி தர ஆய்வு பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தொலைபேசி தொடர்பான புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டாலோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லாவிட்டாலோ 12728 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்பிரமணியன் கூறினார்.

No comments:

Visitors