புது தில்லி, டிச. 17: தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழக அரசு நியமித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்விக் கட்டண நிர்ணயத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்சு, இடைக்கால தடை உத்தரவை ரத்து செய்தது. நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை நடப்பு ஆண்டுமுதலே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் சதாசிவம், சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணம் செல்லும் என்று கூறி தனியார் பள்ளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment